பொது

OP GLOBAL வழி மீட்கப்பட்ட சிறார்களின் கல்வி; அமைச்சு கவனிக்கும்

23/09/2024 04:09 PM

புத்ராஜெயா, 23 செப்டம்பர் (பெர்னாமா) --  Op Global நடவடிக்கை வழி மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட சிறார்களின் கல்வி தொடர்பான விவகாரத்தை, அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி கல்வி அமைச்சு கவனித்துக் கொள்ளும்.

மற்ற சிறார்களைப் போலவே அவர்களுக்கும் கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்பு முறையான கல்வியைப் பெறாத அந்த சிறார்கள், தற்போதைய தங்குமிடத்தில் இருந்தே சிறப்பு திட்டம் மூலம் கல்வியைப் பெறுவார்கள் என்று ஃபட்லினா விளக்கினார்.

''3எம் அம்சம் மற்றும் அவர்களின் உளவியல் உட்பட நாங்கள் பல மதிப்பீடுகள் செய்ய வேண்டும். அவை எல்லாம் நிறைவடைந்த பின்னர், கல்வி அமைச்சு அவர்களின் கல்வி அம்சத்தைக் கவனித்துக் கொள்ளும்'', என்று அவர் கூறினார்.

அந்நடவடிக்கை இரு கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று ஃபட்லினா தெரிவித்தார்.

1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின் கீழ் சிறார்கள் பள்ளிக்குச் செல்வதற்கும் கட்டாயக் கல்வியைப் பெறுவதற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதால், அவர்களில் பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு ஆய்வு செய்யும் என்றும் அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)