பொது

சமூக ஊடக சேவைகளுக்கான உரிமம் சவால்மிக்கது

24/09/2024 07:43 PM

கோலாலம்பூர், 24 செப்டம்பர் (பெர்னாமா) --  அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி நடைமுறைப்படுத்தப்படும் சமூக ஊடக சேவைக்கான உரிமம், இலக்கவியல் தளங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அதன் நேர்த்தியான கையாளுமைக்கும் சிறந்த வழிகாட்டியாக விளங்கும்.

அதேவேளையில், அத்தகைய நடவடிக்கையால் செலவு, கருத்து சுதந்திரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பெரும் சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணர் முனைவர் சஷி குமார் தர்மலிங்கம் தெரிவித்தார்.

''இதே மாதிரியான விஷயத்தை ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசிய செய்துட்டாங்க. இது எதற்காக செய்கிறார்கள் என்றால் பயனர்கள் பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்துவதோடு, அதில் வரக்கூடிய விஷயங்களைச் சரியாக கவனித்து சிறுக்குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத மாதிரி இந்த கட்டமைப்பு பாதுகாப்பை கொடுக்கும்'', என்று அவர் கூறினார்.

மேலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம், அதன் பயனீட்டாளர்களைப் பாதுகாக்கக் கூடிய விதிமுறைகளை உறுதிப்படுத்தி, இச்செயல்பாட்டிற்கு ஒரு நிலையான அணுகுமுறை தேவைப்படுவதாகவும் சஷி குமார் தெரிவித்தார்.

எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு விதிமுறைகளைக் கவனமாக திட்டமிட்டு செயல்படுத்துவதில் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கங்களின் விதிமுறைகளை வரையறுக்கும் அனுமதி, பயனீட்டாளர்களுக்கு முறையான பாதுகாப்பை ஏற்படுத்தும் என்பதோடு போலிச் செய்திகள், ஆபாசப் படங்கள், வன்முறை அல்லது இணைய மிரட்டல் போன்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தின் பரவலையும் குறைக்கக்கூடும் என்று சஷி குமார் நம்பிக்கைத் தெரிவித்தார்.

எனவே, இந்த உரிமம் பெறும் விவகாரத்தைச் சம்பந்தப்பட்டோர் அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறிய முனைவர் சஷி குமார், அதேவேளையில் நடைமுறைக்கு வரும் தேதிக்குப் பிறகு உரிமம் பெறத் தவறுவதும் குற்றம் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

அவ்வாறு செய்வதால், 1988-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் செக்‌ஷன் 588-இன் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சஷி குமார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)