பொது

I-BAP திட்டத்தின் மூலம் இந்திய வணிகர்களுக்கு 60 லட்சம் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடு

27/09/2024 08:46 PM

கிள்ளான், 27 செப்டம்பர் (பெர்னாமா) --  SME Corp என்றழைக்கப்படும் SME CORPORATION MALAYSIA வழி கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு இந்தியர்களுக்காக கூடுதல் அறுபது லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.

I-BAP எனும் இந்திய சிறு வணிகர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உதவி நிதி மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்யும் இந்தியர்கள் பயன் பெறலாம் என்று அதன் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தகுதியுள்ள இந்திய தொழில்முனைவோருக்கு GRANT வடிவில் ஒரு லட்சம் ரிங்கிட் வரை உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாக டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

''சிறு தொழில் செய்யும் இந்தியர்களுக்கு நம்ப இந்த Business Accelerator Programme, I-BAP, ஆறு மில்லியன் கொடுக்க போகின்றோம் நம்முடைய சமுதாயத்திற்கு. இந்த ஆறு மில்லியன் ஒரு மேட்சிங் கிரான்ட். நீங்க ஒரு வெள்ளி போடுங்க, SME Corp ஒரு வெள்ளி போடுவாங்க. அதிகபட்சமாக நீங்கள் ஒரு லட்சம் ரிங்கிட் வரை எடுக்கலாம். இது சிறு தொழில் செய்பவர்களுக்கு மட்டும்''

முன்னதாக, தெக்குன் ஸ்பூமி மற்றும் ஸ்பூமி Goes Big திட்டத்தின் கீழ் மூன்று கோடி ரிங்கிட்டும், பெண் திட்டம் மற்றும் BRIEF-i எனப்படும் பேங்க் ரக்யாட் இந்திய தொழில்முனைவோர் நிதியளிப்பு திட்டத்தின் கீழ் முறையே ஐந்து கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்ட நிலையில், அம்மூன்று திட்டங்களும் இந்திய வணிகர்களுக்குப் பெரும் பயனாக அமைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், I-BAP எனும் இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் வணிகர்கள் தங்களின் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் இயந்திரங்கள் உட்பட இதர தளவாடப் பொருட்களை வாங்க முடியும் என்று ரமணன் வலியுறுத்தினார்.

''இந்த உதவி தொகை அவர்களுக்கு என்ன கொடுக்க முடியும். முதலில் இயந்திரங்களை அவர்கள் வாங்கலாம். நீங்கள் ஒரு விஷயம் வாங்கினால், SME Corp இன்னொரு விஷயம் கொடுப்பாங்க. ஆக, ஒரு இயந்திரத்திற்கு இரண்டு இயந்திரம் கிடைக்கும் இந்த மேட்சிங் கிரான்ட் மூலம். இரண்டாவது தயாரிப்பு சான்றிதழ், மின்னியல் வர்த்தகத்திற்குச் சம்பந்தமான விஷயங்கள், விளம்பரம் போன்ற அனைத்துக்கும் இதனை பயன்படுத்தலாம்''

இதனிடையே, இவ்வாண்டு அக்டோபர் ஏழாம் தேதி, I-BAP திட்டத்திற்கான விண்ணப்பம் தொடங்கப்படவிருக்கும் நிலையில், அது குறித்த கூடுதல் தகவல்களைப் பெற திரையில் காணும் SME Corp-இன் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை நாடலாம்.

இன்று, சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜாவில் உள்ள RENEWCELL நிறுவனத்தை பார்வையிட்ட பின்னர், ரமணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)