சுகாதார பாதுகாப்பு சவாலை எதிர்கொள்ள வெளிநாட்டு தரப்புகளுடன் எம்.சி.எம்.சி வியூக ஒத்துழைப்பு

28/10/2024 01:45 PM

கோலாலம்பூர், 27 அக்டோபர் (பெர்னாமா) -- சுகாதார பாதுகாப்பு தொடர்பாக எழும் சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டில் உள்ள மூன்று தரப்புகளுடன் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், MCMC வியூக ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்க மேம்பாட்டு மற்றும் வர்த்தக நிறுவனம் , ஆஸ்திரேலிய முதலீடு மற்றும் வர்த்தக ஆணையம் ஆஸ்ட்ரேட் மற்றும் பிரிட்டிஷ் உயர் ஆணையம் ஆகியவையே அந்த மூன்று தரப்புகள் ஆகும்.

வரும் காலங்களில் சுகாதார பாதுகாப்பு துறையில் மலேசியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த ஒத்துழைப்பு ஊக்குவிப்பாக இருக்கும் என்று தொடர்பு அமைச்சர்  ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் சுகாதார பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள இந்த வியூக ஒத்துழைப்பு அவசியமாகும்.

தொற்றா நோய், NCD உட்பட அதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கை மற்றும் புறநகர்பகுதிகளில் எழும் சுகாதார பிரச்சனைகள் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும், மலேசியர்களுக்கான சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழில்நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்துவதன் வழி இப்பிரச்சனையைக் குறைக்க முடியும் என்று அவர் கூறினார்.

" சுகாதாரத் துறையில் உள்ள சில செயலிகளைப் பயன்படுத்துவது உட்பட இதில் உள்ள தொடர்புகளை முன்னிலைப்படுத்துவதற்கு எம்.சி.எம்.சி மற்றும் தொடர்பு அமைச்சின் வருகை அவசியம். 5ஜி வேகத்தைப் பயன்படுத்தக்கூடிய செயலிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அரசாங்கம் அல்லது தனியார் மருத்துவமனைகள் ஆய்வு செய்து அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று நம்புகிறோம், " என தொடர்பு அமைச்சரான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

நேற்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டின் மலேசிய அனைத்துலக சுகாதார மாநாட்டின் கூட்டு அறிவிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ஃபஹ்மி ஃபட்சில் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)