பொது

திறன்மிகு ஊழியர்களை உருவாக்க பொருத்தமான பணி சூழல் அவசியம்

07/11/2024 06:40 PM

பாங்கி, 07 நவம்பர் (பெர்னாமா) --  திறன்மிக்க ஊழியர்களை உருவாக்க முதலாளிமார்கள் வசதியான பணியிட சூழலை உருவாக்கி தர வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கேப்ளி அஹ்மட் கூறியுள்ளார்.

ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் மன ஆரோக்கியத்திற்கான வசதிகளை முதலாளிகள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

''பணம் முக்கியம்தான். ஆனால் பணத்தைவிட முக்கியமானது தொழில் நிறுவனங்கள் எவ்வாறு ஒரு நியாயமான சூழல், பொருத்தமான சூழல், ஆரோக்கியமான பணி சூழலை அமைத்து தருகிறது என்பதாகும். வாழ்க்கை-வேலை இரண்டையும் சமநிலை செய்வது அவசியம். பணியாளர்கள் அதிகமான அழுத்தத்தை எதிர்நோக்குவதைத் தவிர்க்க வேண்டும், '' என்றார் அவர்.

பணியாளர்களுக்கான ஆலோசனை அறைகள், சிகிச்சை அறைகள், போன்ற வசதிகளை வழங்குவதோடு ஆரோக்கியாம் சார்ந்த திட்டங்களையும் முதலாளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தேவைப்படும் ஊழியர்களுக்கு ஆலோசனை சேவைகளை வழங்க உளவியலாளர்கள் அல்லது சான்றளிக்கப்பட்ட ஆலோசகர்களை நியமிக்கலாம் என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

சிலாங்கூர் பாங்கியில் 2024 வட்டார ஆலோசனை மாநாட்டை நிறைவு செய்து வைத்த பின்னர், செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)