பொது

866 கைதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றம் - அசாலினா

07/11/2024 07:31 PM

கோலாலம்பூர், 07 நவம்பர் (பெர்னாமா) --   இவ்வாண்டு அக்டோபர் 14ஆம் தேதி வரை மலேசியாவில் சுமார் 866 கைதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

சட்ட மற்றும் கழக சீர்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் இதனை தெரிவித்தார்.

''கைதிகளில் 52 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர். தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாக அமைந்தது'', என்று அவர் கூறினார்.

மரண தண்டனை மறுஆய்வு மற்றும் ஆயுள் தண்டனை சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எஞ்சிய 814 பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டதாக, நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் எழுத்துப்பூர்வமாக டத்தோ ஶ்ரீ அசாலினா விளக்கமளித்தார்.

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 14ஆம் தேதி வரை 12 பேருக்கு மலேசிய உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அதே காலக்கட்டத்தில் மலேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளதை அவர் உறுதிப்படுத்தினார்.

இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி அக்டோபர் 14-ஆம் தேதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை உட்பட அதே காலக்கட்டத்தில் மரண தண்டனைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைவுகள் குறித்து புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்கர்பால் சிங் எழுப்பிய கேள்விக்கு அசாலினா அவ்வாறு பதிலளித்தார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)