பிரேசில், 18 நவம்பர் (பெர்னாமா) -- மலேசியா மற்றும் பிரேசிலில் உள்ள மின்சாரம், மின்னணுவியல் மற்றும் மின்னியல் உபரிப்பாகத் தயாரிப்பு தொழில்துறைகள் தங்களிடம் உள்ள பலத்தை நன்முறையில் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றன.
அதோடு, குளோபல் சௌத் நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதால், அதன் ஒத்துழைப்பை அதிகரிப்பது மிகவும் அவசியமானது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருதுகின்றார்.
லத்தின் அமெரிக்க பொருளாதாரத்தின் முதன்மை நாடாக விளங்குவது பிரேசில் என்று கூறிய அன்வார், மின்னியல் உபரிபாகம், தரவு மையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, ஏஐ ஆகியவற்றின் மையமாக மலேசியா தனது நிலையை அங்கு அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற மின்னியல் உபரிபாகத் தொழில்துறை பிரதிநிதிகள், தொழில்துறை தலைவர்கள் பங்கேற்ற வட்ட மேசை கலந்துரையாடலின்போது அவர் அதனைத் தெரிவித்தார்.
குளோபல் சௌத் நாடுகளிடையே புத்தாக்கம் மற்றும் மேம்பாட்டை அதிகரிப்பதற்கு இக்கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
பாரம்பரிய தொழில்துறைக்கு அப்பாற்பட்ட ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் அன்வார் எடுத்துரைத்தார்.
இந்த வட்ட மேசை கலந்துரையாடலில், பல்வேறு தொழில்துறைகளை உள்ளடக்கிய 20 முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 34 நிறுவனத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மலேசியாவைக் காட்டிலும் பிரேசிலில் இருந்து மின்னியல் உபரிபாக வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியின் அளவு சிறியதாக இருந்தாலும், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பல துறைகளில் பிரேசில் சிறந்து விளங்குவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)