கோலாலம்பூர் 22 நவம்பர் (பெர்னாமா) -- 1எம்டிபி நிறுவனத்தின் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவைக் கண்டறிவதற்கான விசாரணையைத் தொடர, அனைத்துலக அளவிலான ஒத்துழைப்பு உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் அரச மலேசிய போலீஸ் படை, பிடிஆர்எம் பயன்படுத்தும்.
தற்போது அனைத்துலக போலீஸ் (இன்டெர்போல்), ஆசியான் போலீஸ் (ஆசியான்போல்) ஆகிய தரப்புகளுடன் உடனான ஒத்துழைப்பும் தொடரப்படும் என்று தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.
ஜோ லோ மியான்மரில் உள்ளதாக கூறப்படுவது குறித்து அந்நாட்டின் அதிகாரிகள் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
''எங்களிடம் உள்ள எந்த தகவலையும் நாங்கள் ஆசியான்போல் (ஆசியான்போல்) உடன் பகிர்ந்து கொள்வோம். தற்போது எங்களிடம் எந்த தகவலும் இல்லை, மியான்மரும் எந்த தகவலையும் வழங்கவில்லை,'' என்றார் அவர்.
1எம்டிபி நிறுவனத்தின் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வழக்கறிஞர் ஷஃபீ அப்துல்லா, ஜோ லோ மியான்மரில் உள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)