பொது

இருதரப்பு உறவுகளை வியூக பங்காளித்துவத்திற்கு மேம்படுத்தின மலேசியாவும் தென் கொரியாவும்

25/11/2024 05:33 PM

சியோல், 25 நவம்பர் (பெர்னாமா) --   மலேசியாவும் தென் கொரியாவும் தங்களின் இருதரப்பு உறவுகளை வியூக பங்காளித்துவத்திற்கு மேம்படுத்தியிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பல ஆண்டுகள் ஒத்துழைப்பில் ஒரு முக்கிய அடைவுநிலையைக் குறிக்கிறது.

இன்று சியோலில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இடையே நடைபெற்ற சந்திப்பில் அந்த அறிவிப்பு செய்யப்பட்டது.

அமைதி மற்றும் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, கலாச்சாரம் மற்றும் கல்வி, வட்டாரம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகிய நான்கு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதாக, இரு தலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய சவால்களை எதிர்கொள்வது உட்பட சுதந்திரம், அமைதி மற்றும் செழுமையை மேம்படுத்தும் புதிய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு மலேசியா மற்றும் தென் கொரியாவின் வியூக பங்காளித்துவம் குறிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இணைய குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பாதுகாப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் உட்பட பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

மலேசியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக, மூன்று நாள்கள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு அன்வார் நேற்று தென் கொரியா சென்றுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)