மலகா, 25 நவம்பர் (பெர்னாமா) -- ஆடவருக்கான டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியில், நடப்பு வெற்றியாளரான இத்தாலி 2-0 என்ற புள்ளிகளில், நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை தற்காத்துக்கொண்டது.
டென்னிஸ் உலகின் முதன்நிலை ஆட்டக்காரரான யென்னிக் சின்னர், நெதர்லாந்தின் தாலோன் கிரிஸ்பூரை நேரடி செட்களில் வீழ்த்தி இத்தாலியின் வெற்றிக்கு துணை நின்றார்.
இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில், இத்தாலியின் மேத்தியோ பெரெட்டெனி 6-4, 6-2 என்ற நேரடி செட்களில் நெதர்லாந்தின் போதிக் வென் டேவை தோற்கடித்தார்.
அவர் காலிறுதியில் ரஃபயல் நடாலை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் ஆட்டத்தில் கிரிஸ்பூருக்கு எதிராக களமிறங்கிய யென்னிக் சின்னெர் 7-6, 6-2 என்ற செட்களில் வெற்றி அடைந்தார்.
இக்கிணத்தை வெல்வதில், கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதர்லாந்து இறுதி ஆட்டம் வரை முன்னேறியது இதுவே முதன் முறையாகும்.
கடந்த 11 ஆண்டுகளில், இத்தாலி தொடர்ந்து இருமுறை டேவிஸ் கிண்ணத்தை வென்றதும் முதன் முறையாகும்.
2013-இல் செக் குடியரசுக்குப் பிறகு டேவிஸ் கிண்ணத்தை தற்காக்கும் முதல் நாடு என்பதோடு, அதனுடன் Billie Jean King கிண்ணத்தையும் ஒரே ஆண்டில் வென்று வரலாற்றில் இரட்டை வெற்றியை பதிவு செய்த ஐந்தாவது நாடாகவும் இத்தாலி உள்ளது.
இரு கிராண்ஸ்டாம் பட்டங்களை வென்றது, உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்தது, ATP-யின் இறுதி சுற்று என்று களம் கண்ட போட்டிகளில் கோலோச்சி நின்ற சின்னருக்கு 2024 ஒரு சிறந்த ஆண்டாகவே நிறைவடைகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)