கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- கடந்தாண்டு, உள்துறை அமைச்சு பறிமுதல் செய்த 172 'Pride Collection' கைக்கடிகாரங்களை அதன் இறக்குமதியாளரும் விற்பனையாளருமான The Swatch மலேசிய குழும நிறுவனத்திடமே திரும்ப வழங்குமாறு, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
உள்துறை அமைச்சின் தலைமை செயலாளர், அதன் அமலாக்கப் பிரிவு செயலாளர், உள்துறை அமைச்சர் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகியோரை நான்கு பிரதிவாதிகளாக பெயரிட்டு, The Swatch குழும நிறுவனம் செய்த சீராய்வு மனுவிற்கு அனுமதியளித்து, நீதிபதி டத்தோ அமார்ஜீத் சிங் அந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முறையான ஆணை இல்லாமல் கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்நடவடிக்கை அதிகாரப்பூர்வமற்றது என்ற காரணத்தைத் தொடர்ந்து பறிமுதல் அறிவிக்கையை ரத்து செய்யமாறு விண்ணப்பதாரர் செய்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததாக டத்தோ அமார்ஜீத் கூறினார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி, இருபாலினர் மற்றும் திருநங்கை, LGBT உடன் தொடர்புடையதாக கூறி, 'Pride Collection' உட்பட 172 கைக்கடிகாரங்களை பறிமுதல் செய்த உள்துறை அமைச்சின் நடவடிக்கைக்கு எதிராக The Swatch மலேசிய குழும நிறுவனம் சீராய்வு மனுவை பதிவு செய்தது.
1984-ஆம் ஆண்டு அச்சிடுதல் மற்றும் அச்சக சட்டத்தின் கீழ் அவை தடை செய்யப்பட்ட பொருட்கள் அல்ல என்பதால் அக்கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிகாரப்பூர்வமற்றது என்று அந்த சீராய்வு மனுவில் குறிப்பிட்டிருந்தது.
மேலும், 2023-ஆம் ஆண்டு வடிவமைப்பைச் சேர்ந்த அக்கைக்கடிகாரங்கள், எந்தவொரு பாலியல் அறிகுறிகளையும் ஊக்குவிக்கவில்லை என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)