கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- டோல் கட்டணத்தைச் செலுத்த தவிர்க்கும் நெடுஞ்சாலைப் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தவிர்க்க MLFF எனப்படும் வேகமாக செல்லும் பல வழி பாதை செயல்முறையை அமல்படுத்துவதற்கு முன்பு குறிப்பிட்ட சில திட்டங்களில் அரசாங்கம் திருத்தம் செய்ய வேண்டும்.
தற்போது வரை டோல் கட்டணம் செலுத்தாத பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 0.01 விழுக்காடு என்று பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.
''தற்போது உள்ள டோல் சாவடி போல் இல்லாமல் டோல் செயல்முறை இயங்கினால், கட்டணம் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். டோல் கட்டணம் செலுத்தாமல் இருப்பவர்களை எவ்வாறு கட்டணம் செலுத்த வைப்பது என்பது குறித்த திருத்தம் (சட்டம்) செய்ய வேண்டும். அதுதான் எம்.எல்.எஃப்.எஃப் பிரச்சினை'', என்று அவர் கூறினார்.
வேகமாக செல்லும் பல வழி பாதை செயல்முறை அமலாக்கம் தொடர்பான அண்மைய நிலவரம் குறித்து பெர்மாதாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர், முஹமட் ஃபவ்வாஸ் முஹமட் ஜன் எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் அவ்வாறு பதிலளித்தார்.
ஒப்பந்தத்தின் அடிப்படையில், அப்புதிய முறையைப் பயன்படுத்துவது குறித்த முடிவு டிசம்பர் 16-ஆம் தேதி இறுதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)