சிறப்புச் செய்தி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை: சட்ட ரீதியான தெளிவு

25/11/2024 08:00 PM

கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) - பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறைகளும் நாளுக்கு நாள் உலகில் அதிகரித்து வருவது கவலைக்குரியதாகும். 

அண்மையில் மேற்கொண்ட ஆய்வொன்றில், உலகளவில் பத்து நிமிடத்திற்கு ஒரு பெண் வன்கொடுமையினால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும், தங்களுக்கு நன்கு பழக்கமுடைய நபரினாலே அவர்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களையும்  சித்திரவதைகளையும் எதிர்கொண்டு வருவதை அந்த ஆய்வு காட்டுவதாக வழக்கறிஞர் யோகேஸ் எம்.வீரசுந்தரம் கூறினார்.

பொதுவாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவதாக யோகேஸ் வீரசுந்தரம் தெரிவித்தார்.

''அதாவது நேரடியாக தாக்கியோ அல்லது காயங்களை ஏற்படுத்தினால் அது உடல் பாதிப்பு என்பார்கள். விருப்பமில்லாமல் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டால் அது பாலியல் எதிர்ப்பு வன்முறை என்பர். அதைத் தொடர்ந்து மன உளைச்சல் மற்றும் செயல்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை உளவியல் பாதிப்பு என்று கூறுவர்,'' என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஒருவருக்கு விருப்பமான நபரைப் பணயம் வைத்து மிரட்டுவதும், துன்புறுத்தப் போவதாக அச்சுறுத்துவதும் கூட வன்முறையாக வகைப்படுத்தப்படும்.

இத்தகைய எதிர்மறை செயல்களை பொதுவெளியில் செய்வது மட்டுமல்லாது, தனி அறையில் செய்தாலோ அல்லது சண்டைக்குப் பிறகு பெண்களை வீட்டில் பூட்டி வைத்தாலோ அதுவும் வன்முறைப் பிரிவிலே சேரும் என்று யோகேஸ் விவரித்தார்.

''கல்வி, வேலை அல்லது வாய்ப்பு கேட்டு அணுகுவது போன்றவற்றில் பெண்கள் மீது வன்முறை மேற்கொள்ளப்படுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது. உலக ரீதியில் 73 கோடியே 60 லட்சம் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாலியல் துன்புறுத்தல்களை தங்களின் வாழ்க்கையில் கடந்து வந்திருப்பார்கள். குறிப்பாக சராசரியாக நான்கு பெண்கள் ஒருவர் இவ்வகை பாதிப்புகளை எதிர்நோக்கி இருப்பார்,'' என்று அவர் அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் பாலியல் துன்புறுத்தல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்படும் என்றாலும், தற்போது அவ்விவகாரத்தை கடுமையாகக் கருதிய நீதித் துறை புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தி இருப்பதையும் யோகேஸ் கோடிகாட்டினார். 

''நாட்டில் புதிதாக சட்டதிட்டம் மாற்றப்பட்டது. அதை ஸ்டோக்கிங் என்று கூறுவர். இதற்கு முன்னர் இச்சட்டம் அமலில் இல்லை. ஒரு நபரை அவருக்குத் தெரியாமலே சமூக ஊடகம் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ பின் தொடர்ந்து அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதே இதன் செயல்பாடாகும். இச்செயலைப் புரிபவர்கள் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்த்து அந்த வீட்டில் உள்ள சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோரை உட்படுத்தி நிகழும் துன்புறுத்தல்களும் மன உளைச்சல்களும் வீட்டு வன்முறையில் வகைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

எனவே, வன்முறைகளிலில் இருந்து தங்களை எப்போதும் தற்காக்கும் முறைகளையும் உத்திகளையும் அனைத்து வயதுடைய பெண்களும் அறிந்து வைத்திருக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, பெண்களைப் பாதுகாக்கும் பலதரப்பட்ட சட்டங்கள், நாட்டின் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளதோடு அரசாங்கமும் அவ்வப்போது புதிய அணுகுமுறைகளை உருவாக்கி வருவதால் தங்களுக்கு ஏற்படும் வன்முறையை எதிர்க்கவும் அது குறித்து தைரியமாகப் புகார் செய்யவும் பெண்கள் தயாராக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று அனுசரிக்கப்படும் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, 'சட்டம் தெளிவோம்' அங்கத்திற்கு வழங்கிய நேர்க்காணலில் வழக்கறிஞர் யோகேஸ் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)