பொது

'புரோட்டோன்' X70 வாகனத்தில் 'மை டி.வி. மனா-மனா' செயலி

26/11/2024 05:54 PM

கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) --  'மை டி.வி. மனா-மனா' செயலியின் பயன்பாடு தற்போது, 'புரோட்டோன்' X70 ரக வாகனத்தின் தகவல் மற்றும் பொழுதுபோக்கு செயல்முறைக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால், கேளிக்கை அனுபவத்தை வழங்கும் முதல் வாகனமாக அது கருதப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் பயனீட்டாளர் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப உள்நாட்டு ஒளிபரப்பு உள்ளடக்கம், தொடர்ந்து தொடர்புடையதாக இருப்பதை உறுதிசெய்வதில், நேர்மறையான முயற்சியாக இந்த ஒத்துழைப்பு உள்ளதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'மை டி.வி' செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சத்தை எட்டியுள்ளதோடு மாதாந்தோறும் அதைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் ஈர்க்கும் வகையில் உள்ளதாக ஃபஹ்மி கூறினார்.

''மை டிவி' மற்றும் 'புரோட்டோன்' மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் தொடர்பு அமைச்சராக, இத்தகைய தரப்பினரின் முயற்சிகள் மற்றும் நோக்கங்களுக்கு நான் தொடர்ந்து உதவுவதோடு முழு ஆதரவும் அளிப்பேன். குறிப்பாக ஒளிபரப்புத் துறை இன்று நிறைய மாறிவிட்டது. அதிலும் பயனீட்டாளர்களுக்கு தகவல் அல்லது உள்ளடக்கம் வழங்கும் முறையும் நிறைய மாற்றம் கண்டுவிட்டதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்,'' என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 'THE NEW X FACTOR' அறிமுக நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)