கோலாலம்பூர், 03 டிசம்பர் (பெர்னாமா) -- அமெரிக்காவின் அதிபராக டோனல்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து மலேசியா தொடர்ந்து நடுநிலையாக இருப்பதோடு உலகளாவிய பொருளாதார சூழலில் சாத்தியமான மாற்றங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும்.
அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கான கூட்டு அணுகுமுறைகளில் ஒன்றாக “soft diplomacy” எனப்படும் வன்முறையற்ற அரசதந்திரத்தில் கவனம் செலுத்துவதும் இதில் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
அதேவேளையில், எந்தவொரு பெரிய சக்திகள் பக்கமும் சாயாமல் நாட்டின் பொருளாதார நலன்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு மலேசியா கவனமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முஹமட் ஹசான் வலியுறுத்தினார்.
''இது நாம் ஆராய வேண்டிய ஒன்று. வன்முறையற்ற அரச தந்திர முறையை நாம் பயன்படுத்த வேண்டும். எந்தத் தரப்பினர் பக்கமும் அதிகமான ஆதரவைக் காட்டாமல் இருப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நடுநிலையான நாடாக மலேசியாவை நான் வைக்க வேண்டும். மலேசியா நடுநிலையாக இருப்பதுதான் நமக்கு வேண்டும்,'' என்றார் அவர்.
இவ்விவகாரம் தொடர்பில், அடுத்தாண்டு ஆசியான் மாநாட்டிற்கு தலைமையேற்கும் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து இன்று மேலவையில் செனட்டர் டான் ஶ்ரீ டத்தோ லோவ் கியான் சுவான் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு முஹமட் ஹசான் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]