ஷா ஆலாம், 04 டிசம்பர் (பெர்னாமா) -- மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இராணுவப் பயிற்சி மாணவன் மரணம் தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ள வேளையில், மேலதிக நடவடிக்கைக்காக அதனை மரண விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பப்படவுள்ளது.
மருத்துவமனையின் பிரேத பரிசோதனை மற்றும் ஆய்வக முடிவுகள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கைக்காக தமது தரப்பு தற்போது காத்திருப்பதாக, சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமார் கான் கூறினார்.
கடந்த மாதம் நவம்பர் 10-ஆம் தேதி, மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இராணுவப் பயிற்சியில் ஈடுப்பட்ட 25 வயதுடைய மாணவன் அணிவகுப்பு திடலில் மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு மரணமடைந்துள்ளார்.
பயிற்சி ஊழியார்கள், மருத்துவ ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் புகார்தாரர்கள் உட்பட 34 நபர்களின் வாக்குமூலங்களை ஷா ஆலாம் மாவட்டக் போலீஸ் தலைவர் ஏசிபி முஹமட் இக்பால் இப்ராஹிம் தலைமையில் விசாரணை நடந்து முடிந்தது.
இதனிடையே, மருத்துவ அறிக்கையைப் பெற்றவுடன் விசாரணை தொடர்பான சாட்சிகள், தகவல்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்பப்படும் என்று டத்தோ உசேன் உறுதிப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)