விளையாட்டு

உலக செஸ் வெற்றியாளர் போட்டி: டிங் லிரென் - குகேஷ் சமநிலை

04/12/2024 03:59 PM

சிங்கப்பூர், 04 டிசம்பர் (பெர்னாமா) -- சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் வெற்றியாளர் போட்டியில், இந்தியாவின் குகேஷ் டொம்மராஜு, நடப்பு வெற்றியாளரான சீனாவின் டிங் லிரென் சமநிலை கண்டுள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஏழாவது சுற்றில், இவ்விருவருக்கும் இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பின்தங்கி இருந்த டிங் லிரென் பின்னர், துல்லியமான ஆட்டத்தில் மீண்டு வரும்போது சில தவறுகளையும் செய்தார்.

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான 18 வயது குகேஷூம் இதில் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்புகளை நழுவ விட்டார்.

5 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த இந்த சுற்று, 72வது நகர்த்தலில் சமநிலையானது.

இதுவரை முடிந்துள்ள ஏழு சுற்றுகளில் இருவரும் தலா 3.5 புள்ளிகளோடு சமநிலையில் உள்ளனர்.

இந்தப் போட்டியின் மொத்தம் 14 சுற்றுகளில் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறும் ஒருவர் உலக வெற்றியாளர் ஆவார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)