பொது

சிறார் மற்றும் இளையோருக்கான மனநல செயல் திட்டம்; அடுத்த ஆண்டு தொடக்கம்

04/12/2024 04:35 PM

கோலாலம்பூர், 04 டிசம்பர் (பெர்னாமா) --   பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்களிடையே மனநல பிரச்சனை தொடர்பான சம்பவங்கள் இரட்டிப்பானதை அடுத்து, சுகாதார அமைச்சு சிறார் மற்றும் இளையோருக்கான மனநல செயல் திட்டத்தை வகுத்து வருகிறது.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி அமைப்புடன் இணைந்து மனநலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அமைச்சின் இத்திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி கூறியுள்ளார்.

''தேசிய சுகாதார நோய்ப் பாதிப்பு ஆய்வு அறிக்கை மூலம் சிறார்கள், பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய மனநலப் பிரச்சனைகள் 2019ஆம் ஆண்டில் 7.9 விழுக்காடு அல்லது 424,000 பேரில் இருந்து 16.5 விழுக்காடு அல்லது 2023ஆம் ஆண்டில் 922,318 பேராக அதிகரித்துள்ளது'', என்று அவர் கூறினார்.

தேசிய சுகாதார நோய்ப் பாதிப்பு ஆய்வு அறிக்கையின் படி, கடந்த 10 ஆண்டுகளில் தற்கொலை நடவடிக்கைகளின் எண்ணிக்கையும் உயர்வு கண்டுள்ளதாக டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி குறிப்பிட்டுள்ளார்.

அதில், தற்கொலை செய்து கொள்வதான எண்ணம் 7.9லிருந்து 13.1 விழுக்காடு வரை அதிகரித்திருப்பதாக பதிவாகியுள்ளது.

அதேபோல, தற்கொலைக்கான திட்டங்கள் 6.4லிருந்து 10 விழுக்காடு உயர்ந்துள்ள வேளையில், தற்கொலை முயற்சிகள் 6.8லிருந்து 9.5 விழுக்காடுவரை அதிகமாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)