பொது

கடப்பிதழை தற்காலிகமாக பெறும் முகிடினின் விண்ணப்பத்திற்கு அனுமதி 

10/12/2024 06:51 PM

கோலாலம்பூர், 10 டிசம்பர் (பெர்னாமா) - தமது அனைத்துலக கடப்பிதழை தற்காலிகமாக பெறுவதற்காக டான் ஶ்ரீ முகிடின் யாசின் செய்த விண்ணப்பத்திற்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

தமது கணையப் புற்றுநோய் தொடர்பில் மருத்துவ ஆலோசனையைப் பெறவும் இங்கிலாந்தில் இருக்கும் பேரக்குழந்தைகளைச் சந்திக்கவும் அவர் அந்த விண்ணப்பத்தை செய்திருந்தார்.

இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி வரையில் அவர் தமது கடப்பிதழைக் கொண்டிருப்பதற்கு விண்ணப்பித்ததாக அவரது வழக்கறிஞர் டத்தோ ஹிஷாம் தே போ தெய்க்தெரிவித்ததைத் தொடர்ந்து, நீதிபதி அஸுரா அல்வி அந்த அனுமதியை வழங்கினார்.

அண்மையில், டான் ஶ்ரீ முகிடின் கணையப் புற்றுநோயின் நிலையைக் கண்காணிக்க PET ஸ்கேன் எனும் பரிசோதனை மேற்கொண்டபோது சதை வளர்ச்சியின் குறியீடும் சாதாரண அளவை விட சற்று அதிகரித்திருப்பதைக் காட்டியதாகவும் அவர் தெளிவுப்படுத்தினார்.

முகிடின் தமது பதவியைப் பயன்படுத்தி நான்கு குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் மூலம் பணம் பெற்ற மூன்று குற்றச்சாட்டுகளையும் இணைந்து விசாரிக்கும்படி, அரசு தரப்பு செய்த விண்ணப்பத்திற்கான விசாரணைக்கு நீதிபதி அஸுரா அடுத்தாண்டு ஜனவரி 16ஆம் தேதியை நிர்ணயித்தார்.

23 கோடியே 25 லட்சம் ரிங்கிட் நிதியை உட்படுத்தி தாம் எதிர்நோக்கி இருக்கும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை...

மீண்டும் நிலைநிறுத்திய முந்தைய நீதிபதி குழுவின் முடிவை மறுஆய்வு செய்யுமாறு முகிடின் செய்த விண்ணப்பத்தை புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 11-ஆம் தேதி,  நிராகரித்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)