கோலாலம்பூர், 20 டிசம்பர் (பெர்னாமா) - குழந்தையைத் தத்தெடுக்க வழங்குவதாக கூறி, பெண் ஒருவரை ஏமாற்றியதாக, இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் தாதியர் ஒருவர் மறுத்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்ட 40 வயதான மஹிரா முஹமட் யூசோப் என்பவர், 38 வயதான
என்.ஜெயலெட்சுமி நாயுடு என்பவரை ஏமாற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
இவ்வாண்டு ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை செந்தூல், கெப்போங் பாருவில் குற்றம் சாட்டப்பட்ட அம்மாதுவிற்கு 15,950 ரிங்கிட்டை ஜெயலெட்சுமி கட்டம் கட்டமாக செலுத்தியுள்ளார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் ஓராண்டிலிருந்து அதிகபட்சம் பத்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் பிரம்படியுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.
வழக்கை செவிமடுத்த மாஜிஸ்திரேட் ஐனா அஸாரா அரிஃப்பின் 6,500 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் மஹிராவை விடுவிக்க அனுமதி அளித்தார்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்தாண்டு பிப்ரவரி 13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)