கொலை வழக்கில் மின்-ஹைலிங் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

24/12/2024 04:24 PM

கூச்சிங், 24 டிசம்பர் (பெர்னாமா) - நூருல் அசிகின் லன் எனும் பெண் ஒருவரைக் கொலைச் செய்ததாக மின்-ஹைலிங் ஓட்டுநர் இன்று கூச்சிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

மாஜிஸ்திரேட் ஷரீபா பாத்திமா அஸுரா வான் அலி முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 23 வயதான ஜக்வான் மொக்தார், அதனைப் புரிந்துக் கொண்டதாக தலையசைத்தார்.

கொலை வழக்கு, உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், ஜக்வானிடம் இருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த டிசம்பர் ஆறாம் தேதி 28 வயதான நூருல் அசிகினுக்கு ஜக்வான் மரணத்தை விளைவித்ததாகவும் டிசம்பர் 14ஆம் தேதி கூச்சிங், தபுவான், ஜாலான் செட்டியா ராஜாவில் உள்ள கால்வாயில் அழுகிய நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 302-டின் கீழ் விசாரிக்கப்படும் இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, மற்றொரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பில் போலீசாருக்குப் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜக்வானுக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)