கோத்தா பாரு, 29 டிசம்பர் (பெர்னாமா) - கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பாச்சோக்கில் உள்ள ஒரு வீட்டில் பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இரு இராணுவ வீரர்கள் இன்று கிளந்தான் கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர்.
நீதிபதி அஹ்மட் பஸ்லி பாஹ்ருடின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது மஹாடி இஸ்மாயிலும் முஹமட் ஐஸாட் ஹாக்கிம் முஹமட்டும் அதனை மறுத்து விசாரணைக் கோரினர்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 376 (2) (e) -இன் கீழ் மஹாரி இஸ்மாயில் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நிலையில் அதே சட்டம் செக்ஷன் 376 (2)-இன் கீழ் அவர் தண்டிக்கப்படலாம்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் பிரம்படி உட்பட 10 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
அதே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக முஹமட் ஐஸாட் ஹாக்கிம் மீதும் குற்றஞ்சாட்டப்படுள்ளது.
ஐஸாட் ஹாக்கிம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கும் அதே தண்டனை விதிக்கப்படலாம்.
அவர்கள் இருவரையும் தலா 10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்த வேளையில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதோடு பாதிக்கப்பட்டவருக்கும் சாட்சிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்ற கூடுதல் நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)