புத்ராஜெயா, 06 ஜனவரி (பெர்னாமா) - மாட்சிமை தங்கிய மாமன்னரின் கூடுதல் ஆணை இருப்பது குறித்த டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் 2-1 என்ற பெரும்பான்மையில் உயர் நீதிமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது.
இந்த ஆணை அந்த முன்னாள் பிரதமர் தமது எஞ்சிய ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க வழிவகுக்கும்.
தமது விண்ணப்பத்தை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுவதற்கான டத்தோ ஶ்ரீ நஜிப்பின் மேல்முறையீட்டிற்கு நீதிபதி டத்தோ அஸ்ஹாரி கமல் ரம்லியும் டத்தோஸ்ரீ முகமட் ஃபிரூஸ் ஜாஃப்ரிலும் தங்களின் பெரும்பாண்மை முடிவின் வழி அனுமதி அளித்துள்ளனர்.
எனினும், அக்குழுவிற்கு தலைமை ஏற்ற நீதிபதி டத்தோ அசீசா நவாவி அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு அந்த மேல் முறையீட்டிற்கான எவ்வித தகுதியும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, மாமன்னரின் கூடுதல் ஆணை இருப்பது குறித்த தமது குற்றச்சாட்டிற்கு ஆதரவளிக்கும் வகையிலான கூடுதல் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கான நஜிப்பின் விண்ணப்பத்தையும் அவர் நிராகரித்தார்.
ஆனால், அஸ்ஹாரியும் முகமது ஃபிரூசும் அந்த விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்தனர்.
16ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னர் வெளியிட்டதாகக் கூறப்படும் மாமன்னரின் கூடுதல் ஆணையை நீதிமன்றம் சீராய்வு செய்யத் தொடங்குவதற்கான அனுமதியைப் பெற, நஜிப் செய்த விண்ணப்பத்தைக் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து 71 வயதான அவர் கடந்தாண்டு ஜூலை மூன்றாம் தேதி மேல்முறையீடு செய்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)