புத்ராஜெயா, 07 ஜனவரி (பெர்னாமா) - இஸ்தானா நெகாராவிற்கு இன்று வருகைப் புரிந்த சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோஙை, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வரவேற்றார்.
மலேசியா - சிங்கப்பூர் தலைவர்களுடனான 11வது சந்திப்பை முன்னிட்டு இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருக்கும் சிங்கப்பூர் பிரதமர் காலை சுமார் 8.30 மணியளவில் தூதுக்குழுவுடன் இஸ்தானா நெகாரா வந்தடைந்தார்.
செரி மக்கோத்தா மண்டபத்தில் சுமார் ஒரு மணி நேரம் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் மற்றும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் கடிர் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் லாரன்ஸ் வோங் கலந்து கொண்டார்.
கடந்தாண்டு மே மாதம் 15ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற லாரன்ஸ் வோங், ஜூன் 11ஆம் தேதி மலேசியாவிற்கு தாம் மேற்கொண்ட முதல் பயணத்தைத் தொடர்ந்து இது இரண்டாவது முறையாகும்.
மலேசியா-சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதுடன் இருதரப்பு நலன் சார்ந்த அனைத்துலக ரீதியிலான விவகாரங்களை லாரன்ஸ் மற்றும் டத்தோ ஶ்ரீ அன்வாரும் விவாதிக்கவிருப்பதாக விஸ்மா புத்ரா முன்னதாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் JS-SEZ ஒப்பந்தைகளை பறிமாறிக் கொள்ளவிருக்கின்றனர்.
அதோடு, ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் உட்பட கல்வி, பெண்கள் மற்றும் சமூக நலன், காலநிலை மாற்றம், கரிமம் சேமிப்பு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் மக்களின் மேம்பாடு, வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் திறன் மேம்பாட்டை ஆதரித்தல் போன்ற இரு தரப்பு வணிகங்களும் மக்களுக்கான நன்மைகளைக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு JS-SEZ செயல்படவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)