பொது

ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி தீயில் சேதம்

06/01/2025 06:46 PM

ஆயர் தாவார், 06 ஜனவரி (பெர்னாமா) - பேராக் மாநிலத்தில் உள்ள, பழைமையான தோட்டப்புறப் பள்ளிகளில் ஒன்றான ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இன்று தீயில் சேதமடைந்தது.

32 மாணவர்கள், 13 ஆசிரியர்களைக் கொண்டு இயங்கி வந்த இப்பள்ளியில் ஏற்பட்ட இந்த அசம்பாவிதத்தில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

திடீரென தீ பரவியதைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றதாக பள்ளியின் வாரியக் குழுத் தலைவர் பி.மனஹரன் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து காலை மணி 11.39 அளவில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், சுமார் 25 நிமிடங்களில் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் மூன்று வகுப்பறைகள், ஒரு அறிவியல் கூடம், ஒரு கிடங்கு, சிற்றுண்டிச் சாலை, இணைப்பாட நடவடிக்கை மையம் ஆகியவை பெரும் சேதமுற்றன.

தீச்சம்பவத்திற்கான காரணத்தைத் தீயணைப்பு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 1938ஆம் முதல் இயங்கி வரும் இப்பள்ளியின் வளர்ச்சியின் நிமித்தம் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை, பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் வேளையில், இத்தகையத் துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெற்றோர்கள் கவலைத் தெரிவித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)