பொது

புதிய கட்டடத்தில் கல்வியைத் தொடரவுள்ள ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள்

07/01/2025 08:09 PM

ஆயர் தாவார், 07 ஜனவரி (பெர்னாமா) - பேராக், ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி நேற்று திங்கட்கிழமை தீயில் சேதமடைந்ததைத் தொடர்ந்து அப்பள்ளியின் புதிய கட்டடத்தில் மாணவர்கள் கல்வியைத் தொடரவுள்ளனர்.

அக்கட்டடத்தின் பயன்பாட்டை உறுதி செய்ய தகுதி சான்றிதழைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தெரிவித்திருக்கின்றார்.

முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டில் அந்தப் புதியக் கட்டடம் கட்டப்பட்டது.

அதில் மூன்று வகுப்பறைகள் ,ஓர் ஆசிரியர் அறை, தலைமையாசிரியர் அறை மற்றும் நூல் நிலையமும் உள்ளது.

அக்கட்டடத்திற்கான தகுதி சான்றிதழ் கிடைத்ததும் மாணவர்கள் அங்கு கல்வியை மேற்கொள்வார்கள் என்று இன்று அப்பள்ளியைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சிவநேசன் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

தற்காலிகமாக மாணவர்களுக்கு இயங்கலை வாயிலாக கற்றல் கற்பித்தல் நடவடிக்கை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

32 மாணவர்கள் மற்றும் 13 ஆசிரியர்கள் கொண்ட இப்பள்ளி தீயில் மோசமாக சேதமடைந்துள்ளதால் அக்கட்டடத்தைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மூன்று வகுப்பறைகள், ஓர் அறிவியல் கூடம், ஒரு கிடங்கு, சிற்றுண்டிச் சாலை, இணைப்பாட நடவடிக்கை மையம் ஆகியவை பெரும் சேதமுற்றன.

தீ பரவியதைத் தொடர்ந்து உடனடியாக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)