உலகம்

மேற்கு சீனா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு

07/01/2025 06:34 PM

திபெட், 07 ஜனவரி (பெர்னாமா) -  நேபாளத்துக்கு அருகே மேற்கு சீனாவில் உள்ள மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 53ஆக அதிகரித்துள்ளது.

சிகாஸ் நகரில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மேலும் 62 பேர் காயத்திற்கு ஆளாகியதாக சீனாவின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

ரிக்டர் அளவைக் கருவியில் 6.8 ஆக இந்நிலநடுக்கம் நேபாளம், புட்டான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக வட்டார பேரிடர் நிவாரண தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனினும், திபெத் பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவைக் கருவியில் 7.1ஆக இந்நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், யு.எஸ்.ஜி.எஸ் குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

1,500 க்கும் மேற்பட்ட உள்ளூர் தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில், கடந்த நூற்றாண்டில் குறைந்தது ரிக்டர் அளவைக் கருவியில் குறைந்தது 6ஆக பதிவாகிய 10 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக யு.எஸ்.ஜி.எஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை காலை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை எவ்வித சேதமும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

அதோடு, ரிக்டர் அளவைக் கருவியில் 7.0ஆக பதிவாகிய இந்நிலநடுக்கத்தில் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று அந்நாட்டு போலீஸ் பேச்சாளர் பிஷ்வா அதிகாரி தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)