விளையாட்டு

உடல்நிலை இன்னும் சீராகி வருகிறார் லீ சி ஜியா

07/01/2025 07:12 PM

சிப்பாங், 07 ஜனவரி (பெர்னாமா) - மலேசிய பொது பூப்பந்து போட்டியைத் தவறவிட்டிருக்கும் தேசிய ஆடவர் ஒற்றையர் விளையாட்டாளர் லீ சி ஜியா, இம்மாதம் நடைபெறும் இந்திய பொது பூப்பந்து போட்டி மற்றும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக பூப்பந்து சம்மேளனம், பி.டபல்யு.எஃபின், இறுதி உலக தொடர் போட்டியில் காயமடைந்த அவரின் உடல்நிலை இன்னும் சீராகி வருவதாக லீ சி ஜியா தரப்பு அறிக்கை ஒன்றின் வழி கூறியுள்ளது.

மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் லீ சி ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகின்றது.

காயம் காரணமாக இன்று தொடங்கும் மலேசிய பொது பூப்பந்து போட்டியில் இருந்து தாம் விலகுவதாக அவர் முன்னதாக அறிவித்திருந்தார்.

உடல்நிலை சீரான பின்னர், இந்திய பொது பூப்பந்து போட்டி மற்றும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்தும் அவர் ஆலோசித்த நிலையில், லீ சி ஜியாவுக்கு இன்னும் ஓய்வு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் அவர், பி.டபல்யு.எஃபின் இறுதி உலக தொடர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் களமிறங்கினார்.

ஆனால், வலது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் 15-11 என முன்னிலையில் அவர் போட்டியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)