கோலாலம்பூர், 04 ஜனவரி (பெர்னாமா) - அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கும் மலேசியா பொது பூப்பந்து போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக தேசிய ஆடவர் ஒற்றையர் விளையாட்டாளர் லீ சி ஜியா தெரிவித்திருக்கிறார்.
கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற உலக பூப்பந்து சம்மேளனம், பி.டபல்யு.எஃபின் இறுதி உலக தொடர் போட்டியில் காயமடைந்ததை தொடர்ந்து தாம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இம்மாதம் நடைபெறவிருக்கும் இந்திய பொது பூப்பந்து போட்டி மற்றும் இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் கலந்து கொள்வது குறித்தும் தாம் ஆலோசித்து வருவதாக நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் லீ சி ஜியா குறிப்பிட்டுள்ளார்.
பி.டபல்யு.எஃபின் இறுதி உலக தொடர் போட்டியில் களமிறங்கிய லீ சி ஜியாவின் வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து ஏ குழுவின் இறுதி ஆட்டத்தில் சீன விளையாட்டாளர்
லி ஷி ஃபெங்வுடன் நடைபெற்ற ஆட்டத்தில் இருந்து சி ஜியா விலகிக் கொண்டார்.
மலேசிய பொதுப் பூப்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் தைவானை சேர்ந்த சு லி யாஙுடன் சி ஜியா விளையாட அட்டவணையிடப்பட்டிருந்தது.
இதனிடையே, மலேசிய பொது பூப்பந்து போட்டியில் இருந்து லீ சி ஜியா விலகியிருப்பது குறித்து டென்மார்க் விளையாட்டாளர் ஆண்டர்ஸ் ஆண்டன்சன் கவலை தெரிவித்திருக்கிறார்.
சொந்த நாட்டில் நடைபெறும் போட்டியில் சி ஜியா கலந்து கொள்ளாதது தமக்கு வருத்தம் அளிப்பதாக ஆண்டன்சன் கூறினார்.
''அவரின் சொந்த அரங்கில் விளையாட விரும்புகிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் இப்போது உறுதியாக இருக்கிறேன். அதனால் நான் அவருக்காக வருந்துகிறேன். இறுதி உலக தொடர் போட்டியில் அவர் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய அவர் நன்றாக விளையாடினார் மற்றும் எல்லாவற்றிலும் உந்துதலாக இருந்தார். அதனால், நான் அவரைப் பற்றி வருந்துகிறேன். அவர் விரைவில் குணமடைய விரும்புகிறேன், விரைவில் அவரை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்,'' என்றார் அவர்.
ஜனவரி 7ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை மலேசிய பொது பூப்பந்து போட்டி நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)