புத்ராஜெயா, 15 ஜனவரி (பெர்னாமா) -- நாளை முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலெசியா விடுத்திருக்கும் பருவ மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜோகூர், சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையாகவும் வெள்ளத்தை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையிலும் இருக்குமாறு நினைவூட்டப்பட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனமான நட்மா மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் அரசாங்கம் எவற்றையும் எதிர்கொள்ள எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
''தென் தீபகற்ப மலேசியா, சரவாக் மற்றும் சபா ஆகிய மூன்று இடங்களில் பருவமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே ஜோகூர் மாநிலத்தில் உள்ளவர்கள், குறிப்பாக மெர்சிங், பெங்கராங்கைச் சுற்றியுள்ளவர்கள் கவனமாக இருக்குமாறு ஒரு நினைவூட்டப்படுகின்றது. மேலும் சரவாக் மற்றும் சபாவில் உள்ள மக்கள் பருவமழையால் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்'', என்று அவர் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய ஃபஹ்மி, சமூக நலத் துறை ஜே.கே.எம், பொது தற்காப்புப் படை எபிஎம் மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எம்சிஎம்சி போன்று தமது கீழ் செயல்படும் தரப்புகள் மற்றும் நிறுவனங்கள் வெள்ளத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு ஃபஹ்மி கேட்டுக் கொண்டார்.
வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று மாநிலங்களில் எச்சரிக்கை அளவில் தொடர் மழை பெய்யும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை மெட் மலேசியா எச்சரிக்கை விடுத்திருந்தது.
மற்றொரு நிலவரத்தில், மலேசியாவில் முதலீட்டை அதிகரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை அபுதாபி முதலீட்டு தரப்பு, ADIA வெளிப்படுத்தியிருப்பதால் வெளிநாட்டு முதலீட்டிற்கான முன்னணி இடமாக மலேசியா தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளதாக ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
நாட்டின் வலுவான பொருளாதாரம் மீது அந்நிய முதலீடு கொண்டுள்ள நம்பிக்கைக்கு இந்நடவடிக்கை ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)