புத்ராஜெயா, 16 ஜனவரி (பெர்னாமா) -- சுகாதாரத் துறை அரசு ஊழியர்களுக்கு டபல்யு.பி.பி எனப்படும் வெவ்வேறு வேலை நேர செயல்முறை என்பது இன்னும் பரிந்துரை நிலையில் உள்ளது.
அவ்விவகாரம் இன்னும் தொடக்க கட்டத்தில் உள்ளது என்றும், அதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர்,டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
முறையான மதிப்பீடு மற்றும் கலந்துரையாடல் செயல்முறைக்கு உட்படுவதற்கு முன்னரே, இந்த பரிந்துரை குறித்த தகவல்கள் பரவலாக பகிரப்பட்டதற்கு தாம் வருந்துவதாகவும் டாக்டர் சுல்கிஃப்ளி குறிப்பிட்டார்.
''இது வெறும் பரிந்துரை மட்டுமே. அதன் விவரங்கள் எதுவும் என்னிடம் வந்தடையவில்லை. அதே போலத் தான் பொது சேவை துறைக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அது ஓரளவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை வேண்டுமென்றே அல்லது தற்செயலாகக் கூட இருக்கலாம், ” என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில், பி40 மற்றும் எம்40யைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் சுல்கிஃப்ளி அதனைக் கூறினார்.
அனைத்து தரப்பினரின் நன்மைக்காக சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதை உறுதி செய்ய அனைத்து பங்குதாரர்களும் இந்தச் செயல்முறையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)