பெட்டாலிங் ஜெயா, 17 ஜனவரி (பெர்னாமா) -- 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 14 லட்சம் பயணிகளை மலேசிய 'பிரசாரானா' நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் பயணிகளின் கணிசமான உயர்வை அடிப்படையாகக் கொண்டு இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு பயணிகளின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 55ஆயிரமாக இருந்த நிலையில் 2024ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 11 லட்சத்து 80-ஆயிரம் பேராக அதிகரித்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
''நிச்சயமாக பயணிகளின் எண்ணிக்கையில் நாங்கள் தொடர்ந்து வளர்ச்சி காண்போம் என்று நம்புகிறோம். அதனால்தான் ஒட்டுமொத்த பிரசாரானா குழுமம் ரயில் பயணங்களுக்கு மட்டுமல்ல, பேருந்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம். அது தொடர்ந்து வளர முடியும். அதனால்தான் தரை போக்குவரத்து, அதாவது பேருந்து என்ற அடிப்படையில் நாங்கள் அதிகரித்து வருகிறோம். மக்கள் பேருந்துகளைப் பயன்படுத்தும் எண்ணிக்கையையும் அதிகரிக்க விரும்புகிறோம். ஏனெனில் ரயில்களில் நிலையான முன்னேற்றத்தைக் காண்கிறோம், '' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் 2024 'பிரசாரானா' அடைவுநிலை அறிக்கையை தாக்கல் செய்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)