பொது

தீச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

17/01/2025 07:07 PM

ஜோகூர் பாரு , 17 ஜனவரி (பெர்னாமா) -- ஜோகூர், உலு திராம், கம்போங் டத்தோ பெந்தாராவில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீக்கிரையாயினர்.

இச்சம்பவத்தில் உயிர்பிழைத்த சிறுவன் ஒருவர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தீயினால் கருகிய உடல்களும் அடையாளம் காண அங்கு கொண்டு செல்லப்பட்டதாக செரி அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

பின்னிரவு மணி 2.40 அளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் எங் ஜியோக் சூ, லீ சிவ் யோங் மற்றும் சென் சி ஜிங் ஆகிய மூவர் பலியானதாக ஏசிபி முகமட் சோஹைமி இஷாக் கூறினார்.

சம்பவம் தொடர்பான அழைப்பு கிடைத்ததும் ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கையைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் ஐந்து இயந்திரங்களோடு அவ்விடத்திற்கு விரைந்ததாக அப்பிரிவின் தளபதி ரஃபி அஹ்மத் சரேங் குறிப்பிட்டார்.

உயிரிழந்த மூவரின் உடல்கள் முழுவதும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட வேளையில், உயிர் பிழைத்த சிறுவனின் முகம் மற்றும் கைகளில் மட்டுமே தீக்காயம் ஏற்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சம்பவத்தின்போது தாய் மற்றும் பேரப்பிள்ளையும் முன் படுக்கையறையில் உயிரிழந்த வேளையில், மற்றுமொருவர் குளியலறையில் இருந்ததாகவும் ரஃபி அகமட் தெரிவித்தர்.

உயிர்பிழைத்த சிறுவன் வீட்டின் வரவேற்பரையில் இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதவைத் திறந்து உடனடியாக அவனை மீட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)