பொது

ஓபி ராகாடா சோதனை நடவடிக்கை; முன்னாள் மேயர் கைது

17/01/2025 07:16 PM

ஜோகூர் பாரு , 17 ஜனவரி (பெர்னாமா) -- சரவாக்கில் உள்ள ஒளிபரப்பு நிறுவனம் ஒன்றின் உயர் நிர்வாக அதிகாரியால் மோசடி செய்யப்பட்ட ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த சந்தேகத்தின் பேரில் ஓபி ராகாடா சோதனை நடவடிக்கையின் மூலம் முன்னாள் மேயர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

எனினும், கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட இரு பெண்களில், ஒருவர் முன்னாள் தலைமை நிர்வாகி எனவும், மற்றொருவர் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் என்று கூறிய தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசருடின் ஹுசைன், இது தொடர்பில் ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் மேயரும் அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுவிட்டதாக டான் ஸ்ரீ ரசருடின் கூறினார்.

அதேவேளையில் எஞ்சிய இருவரின் தடுப்புக் காவல் இன்றோடு நிறைவடையும் நிலையில் அதனைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து தமது தரப்பு ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 53இல் இருந்து 71 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரவாக், கூச்சிங்கில் இந்த அனைத்து கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அங்குள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து 32 ஆவணங்களை போலீஸ் பறிமுதல் செய்ததாக பெர்னாமா தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)