டெங்கில், 24 ஜனவரி (பெர்னாமா) -- 2025 சீனப் புத்தாண்டை முன்னிட்டு, வழக்கமான டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவை வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மடானி அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட டோல் குத்தகை நிறுவனத்திற்கு திரும்ப செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகைக்காக அரசாங்கம் எதிர்கொள்ளும் நிதி தாக்கம் இரண்டு கோடியே 80 ஆயிரம் ரிங்கிட்டாகும் என்று பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு தொடங்கி நான்கு முதன்மை பெருநாட்களின் போது மடானி அரசாங்கம் வழங்கிய இலவச டோல் சேவைக்கு தொடர்ச்சியாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அலேக்சண்டர்r இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
2023 தொடங்கி 2024ஆம் ஆண்டு வரை, பெருநாட்கால இலவச டோல் சேவை அமலாக்கத்திற்காக, அரசாங்கம் 35 கோடியே 61 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் செலவிட்டது.
கடந்தாண்டு டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெருநாட்கால இலவச டோல் சேவை வழங்குவதை நிறுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 50 விழுக்காடு கழிவை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சலுகை ஜனவரி 27ஆம் தேதி நள்ளிரவு 12.01 தொடங்கி ஜனவரி 28ஆம் தேதி இரவு 11.59 மணி வரை வழங்கப்படும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)