ஜார்ஜ்டவுன், 03 பிப்ரவரி (பெர்னாமா) -- தைப்பூசத்தில் மற்ற பக்தர்களைப் போலவே தங்களின் பிரார்த்தனையை முன்வைக்க மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏக்கமும் ஆவலும் இருக்கும்.
அவர்களின் ஏக்கத்தையும் கனவையும் நிறைவேற்றும் பணியில் கடந்த 26 ஆண்டுகளாக தமிழன் உதவும் கரங்கள் இயக்கம் ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில், இவ்வாண்டு சுமார் 25 மாற்றுத்திறனாளிகள் பினாங்கு தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் 513 படிகட்டுகளைக் கடந்து சென்று இறைவனைத் தரிசிக்க அந்த இயக்கம் தோள் கொடுத்துள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக இச்சேவையை பத்துமலை திருத்தலத்தில் மேற்கொண்டு வந்த இந்த அமைப்பு, இவ்வாண்டு முதல் முறையாக பினாங்கு மாநில மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தைப்பூசத்திற்கு பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான தண்ணீர்மலை ஆலயத்தில் இச்சேவையில் ஈடுபட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 125 தன்னார்வலர்கள், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 25 மாற்றுத் திறனாளிகளை தண்ணீர்மலையில் இருக்கும் முருகனைத் தரிசிக்க சுமந்துச் சென்றதாக அதன் தலைவர் முரளி ஆறுமுகம் கூறினார்.
''ஒவ்வோர் ஆண்டும் பத்துமலை திருத்தலத்தில் இதனைச் செய்து வந்தோம். கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகின்றோம். கடந்த ஆண்டு எங்களுக்கு வெள்ளி விழா. பினாங்கு ஆலயத்திற்கும் செல்ல வேண்டும் என்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இருந்தது. இங்கு 513 படி. சற்று கடினம்தான். கடந்த ஒரு மாதமாக முயற்சிகள் மேற்கொண்டு செய்தோம். தைப்பூசத்தன்று செய்ய முடியாது. இன்று 25 பேரை தூக்கிச் சென்றுள்ளோம்'', என்று அவர் கூறினார்.
தைப்பூச காலக்கட்டத்தில் இதனை ஒரு சமூக சேவை கண்ணோட்டத்தில் பாராமல், மாற்றத் திறனாளிகளின் ஏக்கத்தை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இச்சேவையைப் புரிந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
''மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். இளைஞர்களாகிய நாம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும். இளைஞர்கள் ஒற்றுமையாக இருந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்பது எங்களது நோக்கம்'' என்றார் அவர்.
இதனிடையே, இதுபோன்ற உதவிகள் மூலம் மலையில் இருக்கும் முருகனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது மனதிற்கு திருப்தி அளிப்பதாக மாற்றுத் திறனாளிகள் சிலர் தெரிவித்தனர்.
''சிறப்பாக இருந்தது. மகிழ்ச்சியாக உள்ளது. எதிர்பார்க்கவில்லை. நீண்ட நாட்களாக, மலை ஏறி தரிசிக்கவில்லை. உடல் நலக் குறைவு ஏற்பட்டும் தம்மை தரிசிக்க முருகன் வாய்ப்பு வழங்கியிருப்பதாக கருதுகிறேன். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கினர்'', என்று ஏ.ஆறுமுகம் தெரிவித்தார்.
''இன்று எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலாக நான் மேலே செல்லவில்லை. இன்று செல்கிறேன். அனைவரும் நலமாக இருக்க வேண்டும்'', என்று எம். ஈஸ்வரி கூறினார்.
வானிலையும் சீராக இருந்த நிலையில் பிற்பகல் மணி 3.00-க்கு தொடங்கிய இந்நடவடிக்கை இரவு மணி 8.00-க்கு நிறைவடைந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)