விளையாட்டு

விளையாட்டு சங்கங்களின் தேர்தலில் அரசியல் வேண்டாம் - ஹன்னா

25/01/2025 03:39 PM

காஜாங், 25 ஜனவரி (பெர்னாமா) -- ஒவ்வொரு விளையாட்டு சங்கத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தலின்போது அரசியல் நடைமுறைகளை குறைக்குமாறு, மலேசியாவில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களும் வலியுறுத்தப்படுகின்றன.

அச்சங்கங்களின் ஆண்டு பொதுக் கூட்டத்தின்போது நடத்தப்படும் ஒவ்வொரு தேர்தலும், ஆரோக்கியமான முறையிலும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்று, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோ கேட்டுக்கொண்டார்.

"ஆரோக்கியமான முறையில் போட்டியிட வேண்டும். விளையாட்டு அல்லது விளையாட்டு சங்கங்களிலிருந்து அரசியல் நடைமுறைகளை அகற்ற வேண்டும். விளையாட்டு சங்கத்தில் அரசியல் நடைமுறைகள் நிலவும்போது பாதிக்கப்படுவது விளையாட்டாளர்களும் பயிற்சியாளர்களும் தான்," என்றார் அவர்,

கோலாலம்பூர் ஹாக்கி சங்கத்தின் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கலில், டத்தோ ஶ்ரீ மெகாட் ஷரிமான் ஷஹாருடின் போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பத்ததாக அச்சங்கத்தின் நடப்பு தலைவர் ஐ.விக்னேஸ்வரன் முன்னதாக குற்றம் சாட்டியிருந்ததை ஹன்னா சுட்டிக்காட்டினார்.

எந்தவொரு தேர்தல் அல்லது விளையாட்டு சங்க ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது இயல்பான ஒன்று என்று கூறிய அவர், அக்குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் விளையாட்டு ஆணையர் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவார் என்று தெரிவித்தார்.

சனிக்கிழமை, சிலாங்கூர், காஜாங்கில் கூடைப்பந்து பயிலரங்கிற்கு வருகை மேற்கொண்ட போது, ஹன்னா செய்தியாளர்களிடம் பேசினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)