பொது

5ஜி: தொழில்துறை சார்ந்த 67 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

25/01/2025 04:37 PM

மலாக்கா, 25 ஜனவரி (பெர்னாமா) -- 5ஜி இணைய சேவையை வழங்கும் நோக்கில், நாடு முழுவதிலும் தொழில்துறை சார்ந்த 67 பகுதிகளை தொடர்பு அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு, MITI ஒத்துழைப்புடன் அந்த அனைத்து தொழில்துறை பகுதிகளும் அடையாளம் காணப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

''எங்கள் இலக்கு, இந்த பகுதிகளுக்கு நாங்கள் முன்னுரிமை கொடுப்போம். ஏனெனில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 5ஜி இணைய சேவையின் தேவை மிக அதிகம். எனவே இந்த 5ஜி மூலம் தொழிற்சாலைகள் வேகமான இணைப்பைப் பயன்படுத்தி பயனடைவதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்,'' என்றார் அவர்.

இன்று, மலாக்காவில் 2025-ஆம் ஆண்டுக்கான தொடர்பு அமைச்சின் திட்டங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முஹமட் ஃபௌசி முஹமட் இசா, பெர்னாமா தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் அஃபிடா கமாலுடின் மற்றும் பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜு துரை ராஜ் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே, மக்களிடையே 5ஜி இணைய பயன்பாட்டின் விகிதம் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று விழுக்காடு வரை அதிகரித்து நாடு முழுவதும் சுமார் 53.3 விழுக்காட்டை எட்டியிருக்கும் கூடுதல் தகவலையும் ஃபஹ்மி பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)