பொது

OPS TUNGGAK: தாய்லாந்திலிருந்து வந்த 16 வாகனங்கள் பறிமுதல்

26/01/2025 05:45 PM

கோத்தா பாரு, 26 ஜனவரி (பெர்னாமா) --   Ops Tunggak எனப்படும் தாய்லாந்து பதிவு எண் கொண்ட வாகனங்களின் நிலுவையில் உள்ள சம்மன்களுக்கான சோதனை நடவடிக்கையின் மூலம் 182 ஓட்டுநர்களும் 163 வாகனங்களும் சம்மன்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை சாலைப் போக்குவரத்துத் துறை, ஜே.பி.ஜே இந்த Ops Tunggak நடவடிக்கையை மேற்கொண்டது.

அதேக் காலக்கட்டத்தில், தாய்லாந்திலிருந்து வந்த 16 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, ஜே.பி.ஜே தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி தெரிவித்தார்.

ஐசிபி எனப்படும் அனைத்துலக சுழல் முறை அனுமதி தொடர்பிலான குற்றங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதது உட்பட கருமையான கண்ணாடி பொருத்தியிருந்த குற்றங்கள் அதில் அடங்கும் என்று டத்தோ ஏடி ஃபட்லி  குறிப்பிட்டார்.

"கடந்த ஜனவரி 24-ஆம் தேதி வரை 2,010 ஓட்டுநர்களையும் 1,811 வாகனங்களையும் ஜே.பி.ஜே சோதனையிட்டது. அந்த எண்ணிக்கையில், 182 ஓட்டுநர்களும் 163 வாகனங்களும் சம்மன்களை நிலுவையில் வைத்திருந்தனர்", என்றார் அவர்.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்த தாய்லாந்திலிருந்து வந்த ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்கு 619 ஜே.பி.ஜே உட்பிரிவு P 22 அறிவிக்கைகள் அளிக்கப்பட்ட நிலையில், 172 வாகனங்களின் மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அக்காலக்கட்டம் முழுவதும், நிலுவையில் இருந்த 332 சம்மன்களின் மூலம் நான்கு லட்சத்து 25,104 ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாக ஏடி ஃபட்லி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)