கோலாலம்பூர், 26 ஜனவரி (பெர்னாமா) -- எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருக்கும், மலேசிய மாணவர்கள் எண்மர், இன்று போர்ட் சைட் நோக்கி செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகினர்.
விபத்தில் சிக்கிய மாணவர்களில், ஐவர் சிறிய காயங்களுக்கு ஆளாகியிருப்பதோடு, எஞ்சிய மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக, மலேசிய எகிப்து கல்வி, EME தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டிருந்தது.
முஹமட் ஃபிர்டாவுஸ் யாகோப், முஹமட் அட்லி ஃபித்ரி முஹமட் அனுவார், ஷாருல் ஐமான் ஜாஃபார், முஹமட் சுல்பிக்கார் அஹ்மாட் தர்மிஸி மற்றும் முஹமட் ஹசிக் பட்ரிஷா நோர்ஹமிடோன் ஆகிய ஐந்து மாணவர்கள் சிறு காயங்களுக்கு ஆளாகினர்.
எனினும், முஹமட் சஃரி அப்துல் ரஷிட், முஹமட் சுல்ஹி நஸ்ரி மற்றும் முஹமட் ரய்ஸ் சஃரான் முஹமட் சுஹைமி ஆகிய மூவர், கஹேராவில் உள்ள சயெட் கலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த அல்-அஸ்ஹார் பல்கலைக்கழக நிர்வாகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ போர்ட் சைட் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் அரபு மொழி புலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை அனுப்பியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)