கோலாலம்பூர், 29 ஜனவரி (பெர்னாமா) -- போரினால் பல இன்னல்களை எதிர்நோக்கி வரும் காசாவை மீண்டும் மேம்படுத்துவதற்கான தொடக்க முயற்சியாக அங்கு ஒரு பள்ளிக்கூடம், மருத்துவமனை மற்றும் பள்ளிவாசல் ஆகியவற்றை மலேசியா கட்டவிருக்கிறது.
மக்கள் மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்போடு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
"மலேசியா தரப்பில், மக்கள் மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்போடு ஒரு பள்ளிக்கூடம், ஒரு மருத்துவமனை மற்றும் ஒரு பள்ளிவாசல் ஆகியவற்றை கட்டவுள்ளோம். மக்களின் தியாகத்திற்கு இது நமது முயற்சியாகும். நம்மைப் பாதுகாப்பதோடு காசா மற்றும் பாலஸ்தீனத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில் கடவுள் துணையாக இருக்கட்டும்," என்றார் அவர்.
இன்று தாம் வெளியிட்ட ஒரு காணொளி பதிவின் வழி, டத்தோ ஶ்ரீ அன்வார் அதனை கூறினார்.
கிழக்காசிய திட்டத்தின் மூலம் நிதியைத் தொடங்க எண்ணம் கொண்டிருக்கும் ஜப்பான் மற்றும் மலேசியா அரசாங்கங்களின் கூட்டு முயற்சியில் காசாவின் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் விவரித்தார்.
2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களினால் சேதமடைந்த காசாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு, ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, முன்னதாக பிரதமர் கூறியிருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)