பொது

சரவாக் நிலச்சரிவில் நால்வரின் சடலங்கள் மீட்பு

29/01/2025 07:06 PM

கூச்சிங், 29 ஜனவரி (பெர்னாமா) -- சரவாக், மீரி நகரிலுள்ள கம்போங் லேரேங் புக்கிட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில், இடிபாடுகளில் சிக்கிய அறுவரில் ஒருவர் காப்பாற்றப்பட்ட வேளையில், நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இரண்டு பெண்கள், மூன்று சிறுமிகள், ஒரு சிறுவன் ஆகியோரை உள்ளடக்கிய இச்சம்பவம் குறித்து, அதிகாலை 2.58 மணிக்கு தங்கள் தரப்பிற்குப் தெரிய வந்ததாக, சரவாக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, JBPM-மின் நடவடிக்கை மையம் குறிப்பிட்டிருந்தது.

முன்னதாக, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஓர் ஆடவரை எவ்வித காயங்களுமின்றி தங்கள் தரப்பு காப்பாற்றியதாக, நடவடிக்கை மையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று காலை 6.17 மணிக்கு, 17 வயதுடைய ஆடவரின் சடலத்தை, சரவாக் மாநில JBPM கண்டெடுத்துள்ளது.

பின்னர், காலை சுமார் 10.53 மணிக்கு மற்றொரு சடலம் மீட்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட அந்த உடல் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருந்ததாகவும், அவர் இறந்ததை, சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவர் உறுதி செய்ததாகவும், சரவாக் மாநில JBPM-யின் நடவடிக்கை மையம் தெரிவித்தது.

இந்நிலையில், இரண்டாவது சடலம் கண்டெடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மேலும் இரண்டு சிறுமிகளின் சடலங்களையும் மீட்புக் குழு கண்டெடுத்தது.

முதலாவது சிறுமியின் உடல் காலை 11.38 மணியளவிலும், அடுத்த பத்து நிமிடத்தில் நான்காவது உடலும் கண்டெடுக்கப்பட்டதாக நடவடிக்கை மையம் குறிப்பிட்டது.

இச்சம்பவத்தில் இதுவரை நால்வர் பலியாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில், மீரி, லேரேங் புக்கிட் கனடாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் சேதமடைத்துள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)