பாகான் டத்தோ, 30 ஜனவரி (பெர்னாமா) -- சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை, இன்று பிற்பகல் வரை 6,700-க்கும் அதிகமாக பதிவாகி இருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட 13 இடங்களுக்கு, மத்திய மற்றும் மாநில பேரிடர் நிவாரண உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதுவரை அம்மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட தற்காலிக நிவாரண மையங்கள், PPS அமைக்கப்பட்டிருப்பதாக, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.
பி.பி.எஸ்களை அமைக்க உயர்வான பகுதிகளில் இருக்கும், பள்ளிக்கூடம் மற்றும் பொது மண்டபங்களைக் கண்டறிய தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா, கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்படும் என்று தேசிய பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுத் தலைவருமான அஹ்மாட் சாஹிட் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பகுதியில் Bailey பாலத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை குறித்து தமது தரப்பு ஆய்வு செய்து வருவதாக, அவர் மேலும் விளக்கினார்.
"பெய்லி பாலத்திற்கான நில மேற்பரப்பின் பொருத்தம் குறித்துத் தெளிவான ஆய்வுக்குப் பின்னர், 72 மணி நேரத்திற்குள் பாலத்தை உருவாக்க மலேசிய இராணுவப் படை பொறியியலாளர் மற்றும் ஜே.கே.ஆர் உடன் கைகோர்த்துள்ளோம்," என்றார் அவர்.
இதனிடையே, நீர் மட்டம் அதிகரிப்பதற்கு, மூன்று நாள்களுக்கு முன்னதாகவே, மக்கள் தங்களின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருள்களுடன் சம்பந்தப்பட்ட பகுதியிலிருந்து வெளியேற முதற்கட்ட எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் அஹ்மாட் சாஹிட் கூறினார்.
இன்று, பேராக், பாகான் டத்தோவில் இமிதியாஸ் துமினா ஹமிடி இடைநிலைப் பள்ளியின் கட்டுமான பணிகளைப் பார்வையிட்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)