பிலாடெல்பியா, 01 பிப்ரவரி (பெர்னாமா) -- நேற்று, பென்சில்வேனியா, பிலாடெல்பியாவில் ஒரு குழந்தையையும் மேலும் ஐவரையும் ஏற்றிச் சென்ற சிறிய ரக மீட்பு விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் யாரும் உயிர் பிழைத்ததாக உறுதி செய்யப்படவில்லை.
மருத்துவ சேவை வழங்கும் விமானத்தில், சம்பவத்தின்போது ஒரு குழந்தை நோயாளி, அக்குழந்தையின் பராமரிப்பாளர் மற்றும் விமான பணியாளர்கள் நால்வர் இருந்ததாக சம்பந்தப்பட்ட நிறுவனம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்கு பிலாடெல்பியா உள்ள ரூஸ்வெல்ட் பேரங்காடிக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்த வேளையில், அப்பகுதியில் இருந்த பலர் காயத்திற்கு ஆளாகியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறைந்தது ஒரு வீடும் பல கார்களும் தீப்பிடித்து எரிந்தன.
விபத்தின்போது வானிலை குளிராகவும், மழையாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விமானம், வடகிழக்கு பிலாடெல்பியா விமான நிலையத்திலிருந்து மிசோரியில் உள்ள Springfield-Branson தேசிய விமான நிலையத்திற்கு பயணத்தில் இருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே, சம்பவ இடத்திற்கு அருகில் வசிப்பவர்கள் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு பிலாடெல்பியா மேயர் செரெல் பார்க்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)