பொது

தைப்பூசம்: உணவு விரயத்தையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும்

07/02/2025 07:53 PM

ஜார்ஜ்டவுன், 07 பிப்ரவரி (பெர்னாமா) -- தைப்பூச திருவிழாவின் போது தொண்டு நிறுவனங்களால் இலவசமாக வழங்கப்படும் உணவுகளை விரையமாக்குவதையும் நெகிழி பயன்பாட்டையும் தவிர்க்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதன் வழி, ஆலய வளாகங்கள் மற்றும் சுற்றுப்புற தூய்மையை பாதுகாக்க முடியும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் பினாங்கு மாநில இந்து சங்க பேரவை தெரிவித்துள்ளன.

தைப்பூசத்தில் ஆலய வளாகங்களிலும் இரத ஊர்வலங்களின் போது உணவுகள் வழங்கப்படும்.

சில பொறுப்பற்ற தரப்பினர் அந்த உணவுகளின் பொட்டலங்களை திறந்த வெளியில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகின்றது.

அதனை தவிர்ப்பதற்கு பக்தர்களும் பொது மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வு மற்றும் கல்வி பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் பகிர்ந்து கொண்டார்.

''இந்த ஆண்டு ஒரு பசுமையான தைப்பூசத்தைக் கொண்டாடும் படி கேட்டுக் கொள்கின்றோம். மக்களும் வரும்போது ஒரு பையைக் கொண்டு வந்து அந்தப் பையில் இலவசமாக கொடுக்கப்படும் உணவை வைத்துக் கொள்ளலாம். வீட்டிலிருந்து உணவுப் பாத்திரங்களை எடுத்து வந்து உணவுகளைப் பெற்றுக் கொள்ளலாம், இதனால், குப்பைகளைத் தவிர்க்கலாம்,'' என்றார் அவர்.

உணவை நெகிழிப் பொட்டலங்களில் வழங்குவதற்கு பதிலாக காகிதத் தட்டுகள் மற்றும் கோப்பைகளைப் பயன்படுத்தும் படி தொண்டு நிறுவனங்களுக்கு சுப்பாராவ் அறிவுறுத்தினார்.

அதோடு, உணவுகளை போதுமான அளவில் மட்டும் பெற்றுக் கொள்வது சிறப்பு என்கின்றார் சுப்பாராவ்.

''ஆகவே, பக்தர்கள் மலேசியாவில் எங்குச் சென்றாலும் தயவு செய்து உணவை விரயம் செய்ய வேண்டாம்.  தொண்டூழிய அமைப்புகளும் மக்களும் நெகிழிப் பைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.,'' என்றார் அவர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக நெகிழிக்கு எதிரான பிரச்சாரத்தை தங்களது தரப்பு மேற்கொண்டு வருவதாக சுப்பாராவ் கூறினார்.

''கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு தென்படுகின்றது. காரணம் பள்ளிக்கூடங்கள், பொது இயக்கங்களிடையே இப்பிரச்சாரத்தை நேரடியாக கொண்டுச் செல்வதால் அவர்களும் இதை உணர்ந்து நெகிழையை பயன்படுத்தாமலும் கொடுக்கின்ற உணவில் அளவையும் குறைத்துக் கொள்கின்றார்கள்,'' என்றார் அவர்.

எனவே, சுற்றுச்சூழலின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தங்களது தரப்பு இந்தப் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றுக் கூறிய சுப்பாராவ், இதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் கேட்டுக் கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)