கோலாலம்பூர், 04 பிப்ரவரி (பெர்னாமா) -- பத்துமலை திருத்தலத்தில் மின் படிக்கட்டுகள், பல்நோக்கு மண்டபம் கட்டும் திட்டங்களில் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம் கவனம் செலுத்தி வருகின்றது.
அத்திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கான அனைத்து ஆவணங்களும் சிலாங்கூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முறையான அனுமதிகள் வழங்கப்படும் என்று மாநிலமந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம் முன்னெடுத்திருக்கும் இம்முயற்சி பத்துமலை திருத்தலத்திற்கு வருகைப் புரியும் பக்தர்களுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் சிறந்த பயனை அளிக்கும் என்று அமிருடின் ஷாரி கூறினார்.
''ஆலய தரப்பை சந்தித்து சில விவகாரங்களைப் பேசினேன். நாம் முடிவு செய்யும் விசயங்களில் மின்படிகட்டுகளும் உள்ளது. கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதற்கான மேம்பாட்டு ஆணை அல்லது திட்டமிடல் அனுமதியை அனுப்ப அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனைச் செயல்படுத்த கால அவகாசம் எடுக்கும். அதன் பிறகு அனுமதி வழங்குவோம். அதோடு, பல்நோக்கு மண்டபம் கட்ட அனுமதிப்போம். அவர்களது விண்ணப்பத்தை சார்ந்துள்ளது,'' என்றார் அவர்.
நேற்று திங்கட்கிழமை பத்துமலை திருத்தலத்திற்கு வருகைப் புரிந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, இத்திட்டங்களுக்கு தேவஸ்தானம் முறையாக விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அதற்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் என்று தாம் நம்புவதாக ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான் ஶ்ரீ ஆர். நடராஜா தெரிவித்தார்.
''நம் தேவஸ்தானத்திற்கு உள்ள பிரச்சனைகளை எல்லாம் அவரிடம் முன் வைத்தோம். அவர் அதற்கு இணங்க அவர் கீழ் பணியாற்றுகின்ற முக்கிய அதிகாரிகளை எல்லாம் அழைத்துக் கொண்டு வந்திருந்தார். முதலாவதாக நாம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கும் மின் படிக்கட்டு விவகாரம். அதற்கான வேலைகளை செய்ய சொல்லியிருக்கின்றார். அது நமக்கு மகிழ்ச்சியான செய்தி. அடுத்தாக பல்நோக்கு மண்டபம். அதனுடைய விண்ணப்பங்களையும் வாங்கிக் கொண்டு வெகு விரைவில் அங்கீகரித்து கொடுப்பதாக சொல்லியிருக்கின்றார்,'' என்றார் அவர்.
பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் வசதிகளுக்காக இன்னும் பல மேம்பாட்டு திட்டங்களை கட்டம் கட்டமாக தேவஸ்தானம் மேற்கொண்டு வருவதாக நடராஜா செய்தியாளர் சதிப்பில் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)