உலகில் வரி தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும் மலேசியா சரியான தடத்தில் பயணிக்கிறது

05/02/2025 06:17 PM

கோலாலம்பூர், 05 பிப்ரவரி (பெர்னாமா) -- வரி தொடர்பாக உலக நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், தனது 2025-ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி,ஜி.டி.பி இலக்கை அடையும் பாதையில் மலேசியா பயணிக்கிறது.

மலேசியாவின் நடுத்தர மற்றும் நீண்ட கால வளர்ச்சி தொடர்பான வாய்ப்புகள், கடந்த ஒரு மாதமாக நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாகப் பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

கடந்த வாரம் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்ததாக அவர் தெரிவித்தார்.

வரி தொடர்பாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து, முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சின் மூலம் அரசாங்கம் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

"சரியான நேரத்தில் எல்லாவற்றையும் விலை நிர்ணயம் செய்வதற்கான வழியைச் சந்தை கண்டறியும் என்று நான் நினைக்கிறேன். நிறைவில் மலேசியப் பொருளாதாரம் உலகிற்குப் பரிந்துரையை வழங்கக்கூடிய வாய்ப்பை பெறும்," என்று ரஃபிசி குறிப்பிட்டார்.

இன்று கோலாலம்பூரில், உலக வங்கி அறிக்கையைத் தொடக்கி வைத்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 முதல் 5.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று நிதி அமைச்சு கணித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)