புத்ராஜெயா, 07 பிப்ரவரி (பெர்னாமா) -- பிபிகேஎம் எனப்படும் மோட்டார் வாகன பரிசோதனை சேவையின் முதல் கட்டத்தை அமல்படுத்த, போக்குவரத்து அமைச்சு மூன்று நிறுவனங்களை நியமித்துள்ளது.
வவசான் பிந்தாங், பக்காதான் பெட்ரோலியம் உட்பட பெரிமான் கோல்ட் ஆகிய அம்மூன்று நிறுவனங்களுக்கு, வணிக மற்றும் தனியார் வாகன பரிசோதனை சேவை வளாகங்களைத் திறக்க, இன்று தொடங்கி ஈராண்டுகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சு மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை, ஜேபிஜே, முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் நிர்ணயித்த பிபிகேஎம் விண்ணப்ப வழிகாட்டிகளுக்கு ஏற்ப விண்ணப்பித்த 12 நிறுவனங்களிலிருந்து அம்மூன்று நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் விவரித்தார்.
''குறுகிய காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் அவர்களால் மேம்படுத்த முடிந்தால், அமைச்சு விரைவில் உரிமங்களை வழங்கத் தயாராக இருக்கும். உதாரணத்திற்கு, அவர்கள் அதனை 6 மாதங்களில் முடிக்க முடிந்தால், நாங்கள் அவர்களுக்கான உரிமத்தை வழங்குவோம். அதை முடிக்க 24 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயா, போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லோக் அத்தகவல்களைக் கூறினார்.
பிபிகேஎம் -இன் அனைத்து நிபந்தனைகள் மற்றும் செயல்பாட்டு தர விதிமுறைகள் இணங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களின் நடவடிக்கைகளை அமைச்சு ஜேபிஜே மூலம் கண்காணிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)