பொது

துப்புரவு பணியாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் 

09/02/2025 03:16 PM

ஷா ஆலம், 09 பிப்ரவரி (பெர்னாமா) - நேற்றிரவு, சிலாங்கூர் செத்தியா ஆலாமில் உள்ள பேரங்காடி ஒன்றில் துப்புரவு பணியாளர் ஒருவருக்கு காயம் ஏற்படும் அளவிற்கு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சுமார் 30 வயதுடைய அச்சந்தேக நபர் போதைப் பொருள் உள்ளிட்ட 11 குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

உளவு நடவடிக்கை மற்றும் மறைக்காணியில் பதிவான காணொளியில் அச்சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

தமக்கும் அடையாளம் தெரியாத அச்சந்தேக நபர் தம்மை நோக்கி நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதிக்கப்பட்டவர் விவரித்தார்.

பின்னர், தப்பியோட முயற்சித்த அந்நபர், அங்கு வருகை புரிந்திருந்த ஒருவரை துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டி, அவரின் புரோடுவா அத்திவா ரகக் காரில் ஏறிக்கொண்டு ஷா ஆலம் பகுதியை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தியுள்ளார். 

ஷா ஆலம் நெடுஞ்சாலையின் ஓரத்தில் காரை நிறுத்த கட்டளையிட்ட அந்நபர் அதிலிருந்து தப்பியோடியுள்ளார். 

மரண தண்டனை விதிக்க வகைச் செய்யும் 1971-ஆம் ஆண்டு சுடும் ஆயுதம் சட்டம் செக்‌ஷன் மூன்று, மற்றும் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 307-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.  

இதனிடையே, இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளரின் காலில் காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 30 வயதுடைய அந்த வெளிநாட்டவர், சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த உள்நாட்டு ஆடவர், சுமார் இரவு மணி 10 அளவில் அப்பேரங்காடிக்கு வந்ததாக நம்பப்படுகிறது என்றும் சுடுவதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்டவரை நோக்கி வந்ததாகவும்,

பாதிக்கப்பட்டவரை சந்தேக நபர் துப்பாக்கியால் குறைந்தது எட்டு முறை சுட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட பேரங்காடியின் ஒரு நகைக்கடையில்  நிகழ்ந்த இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)