புத்ராஜெயா, 12 பிப்ரவரி (பெர்னாமா) -- ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பல அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்குத் தீர்வு காண புதிய பரிந்துரை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, இது முதலில் அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
''பல நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்கான சில திட்டங்களைச் சமர்ப்பிக்க முன்னாள் கருவூல பொது செயலாளரை (டத்தோ ஸ்ரீ அஸ்ரி ஹமிடொன்) நான் பணித்துள்ளேன். அவை தேசிய தலைமைச் செயலாளரிடம் கொண்டு வரப்படும். விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு நான் முடிவு செய்வேன், '' என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மிகப்பெரிய இழப்புகளை எதிர் கொண்ட நிறுவனங்கள் இருப்பதால், உயர் மட்ட ஒப்புதல் இல்லாமல் அரசு நிறுவனங்களின் கீழ் புதிய நிறுவனங்களை நிறுவ இனி அனுமதி வழங்கப்படாது ன்று பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
''உயர் மட்ட ஒப்புதல் இல்லாமல் எந்த நிறுவனத்தையும் நிறுவ முடியாது என்று நான் கட்டளையிட்டுள்ளேன். காரணம் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பெரும் இழப்புகளைப் பதிவு செய்கின்றன. நிறுவனத்தை ரத்து செய்ய எடுக்கப்படும் முடிவு எளிதான காரியமல்ல. ஆனால் அதைக் கட்டாயமாக இருந்தால், நாம் அதைச் செய்ய வேண்டும். இது நிறுவன சீர்திருத்தம் என்று அழைக்கப்படுகிறது,'' என்று அவர் விளக்கினார்.
நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பொது சேவை ஊழியர்கள் சிந்தித்து விரைவாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)